ஆண்மை தவறேல்
நாம் அனைவரும் ஔவையார் எழுதிய நீதி நூலான ஆத்திசூடியை கேள்விப்பட்டிருப்போம். ஔவையாரின் ஆத்திசூடி போன்றே நல்ல பல அறிவுரைகளுடன் மகாகவி பாரதியாரால் 20ம் நூற்றாண்டில் புதிய ஆத்திசூடி எழுதப்பட்டது. மொத்தம் 110 அறிவுரைகளைக்கொண்ட இந்நூலில் ஆண்மை தவறேல் என்ற வழிகாட்டலும் ஒன்றாகும். ஆண்மை எனும் பெயர்ச் சொல்லுக்கு பாலின பேதமில்லை. ஆண்மை என்பது வீரம் என்று பொருள்படும். வீரம் ஆண், பெண் எல்லோருக்கும் பொதுவானது.
ஒன்றை, ஒரு காரியத்தை துணிச்சலுடன் எதிர்கொள்வதே வீரமாகும். இதைத்தான் பாரதி அன்று தன் ஆத்திசூடியில் குறிப்பிட்டுள்ளார். இன்று இந்நாகரிக உலகில் போட்டி, பொறாமை நிறைந்த சமூகத்தில் பலருக்கு, கிடைத்திருக்கும் அற்புதமான வாழ்க்கையை வாழக்கூட துணிச்சல் இல்லாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
தேர்வெழுதி தோற்றுப்போனால் தற்கொலை, காதலில் தோற்றால் தற்கொலை, வறுமைக்கு விடை தற்கொலை என இன்று தற்கொலைக்கான கரணங்கள் பலவாகும். அதே நேரம் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கிறது.
தோல்வியே வெற்றியின் முதல்படி,தோல்விகளே வெற்றியை அடைவதற்கான ரகசிய குறிப்புக்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். இங்கு வெற்றியடையாமல் தோற்றுப்போனவர்கள் பலர் இருக்கலாம் அனால் தோற்று தோற்றுப்போனவர்கள் என்று எவருமில்லை. நாம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைக்குரிய தடைக்கல்லும நம் வாழ்வின் உயர்விற்கான படிக்கற்களே என்பதுதான் நிதர்சனமான உண்மை.
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்- அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு- தழல்
வீரத்திற் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் என்று பாடிய பாரதியின் வழிவந்தவர்கள் நாம் என்பதை நிரூபித்துக் காட்டவேண்டும்.
அதாவது தன்னகப்பட்டவர்களை எரித்து சாம்பலாக்கும் தன்மைகொண்ட நெருப்பில் சிறு தழல் என்றோ பெரும் சுவாலை என்றோ எந்த பேதமுமில்லை. சிறு தழல் கூட பெரும் சுவாலையாகி சர்வநாசம் செய்திவிடும் என்பது போல சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் நாம் எடுக்கும் சிறு துணிச்சலான முடிவுகளே பிற்காலத்தில் பெரும் வீர தீர செயல்களை செய்ய காரணமாக அமைகிறது.
சிலர் இருக்கிறார்கள், என்றுமே மற்ற முடியாத பிறப்புக்குரிய சில விடையங்களை நினைத்து வருந்தி தங்கள் வாழ்க்கையையே பாழ்படுத்திக்கொள்வார்கள். "நான் இந்தக்குடும்பத்தில் பிறந்ததைவிட ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தால் நிறைய சாதித்திருப்பேன்.", "என்னை படிக்க வைக்குமளவுக்கு என் வீட்டில் வசதியில்லை.", "நான் இந்த இடத்தில் பிறந்ததைவிட வெளிநாட்டில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.", என்றெல்லாம் விரக்தியடைந்த மனங்கள் பல உண்டு.
வரலாற்றை பின்னோக்கி பார்க்கும் போது நாம் பெயர் தெரிந்து வைத்திருக்கும் அனைத்து சாதனையாளர்களுமே, வாழ்வில் பெரும் கஷ்டங்களாலும் துன்பங்களாலும் ஆட்டுவிக்கப்பட்டு தம் அயராத உழைப்பினால் தொடர்ந்து போராடி வெற்றியடைந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழிநுட்ப வல்லுநர், இந்தியாவின் 11வது குடியரசுத்தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசான், வருங்கால இளைஞரின் முன்மாதிரி என்றெல்லாம் போற்றப்படும் நாம் அனைவரும் அறிந்த DR. A.P.J அப்துல்கலாம் கூட தன் குடும்ப வறுமையின் காரணமாக பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் செய்தித்தாள் விற்பனை செய்தவர் தான் என்பதை மறந்துவிடக்கூடாது. சாதனைக்காக நாம் கொடுக்கவேண்டிய கூலி ஊக்கமும் உழைப்பும் மட்டுமே.
முள்ளிலே மலர்வதனால் ரோஜா உடன் உதிர்ந்துவிடுவதில்லை
சேற்றிலே பிறப்பதனால் தாமரை சேறோடு ஒட்டிவிடுவதில்லை
நீர் பாலோடு கலந்து நின்றாலும் அன்னம் ஒரு கணமும் தாமதிப்பதில்லை
சேறு மிதிக்கும் வாத்துக் குஞ்சல்ல வானுயரப் பறக்கும் அன்னப்பறவை நாம் என அடிமனதில் நம்பிக்கைகொள்ள வேண்டும். தயங்கியவர் வென்றதில்லை, துணிந்தவர் தோற்றதில்லை. நெஞ்சில் வீரம் கொண்டவர்களே பல துணிச்சலான முடிவுகளை எடுக்கக்கூடிய தீரர்களாகவும் இருக்கிறார்கள். இன்று நாம் எடுக்கும் துணிச்சலான ஒரு முடிவே நம் வளமான எதிர்காலத்தை செதுக்கப்போகும் கூர்உளியாகும். இதனால் தான் "அச்சமில்லை அச்சமில்லை " என்ற பாடலில் "உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமென்பதில்லையே" எனபாடி மனிதரை துணிவின் உச்சத்திற்கே கொண்டு சென்றான் பாரதி.
நன்றி
