எதுவும் கடந்து போகும்
" இடும்பைக்கு இடும்பை படுப்பர்
இடும்பைக்கு இடும்பை படாதவர்"
துன்பம் வந்தபோது அதற்காக வருந்திக் கலங்காதவர், அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்றுவிடுவர் என்றார் வள்ளுவர். ஆம் உண்மை தான் இதுவும் கடந்து போகும் என்று அன்றே புத்தர் போதனைகள் வழங்கியிருக்கிறார்.
உண்மையில் இப் பிரமாண்ட உலகில், மாய வாழ்வில் " எதுவும் கடந்து போகும் " என்பது தான் எவராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாத மாபெரும் உண்மையாகும். வாழ்வில் நடப்பவைகள் அனைத்தும் மாயங்கள் போல் இருந்தாலும், வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் கிடைத்த அற்புத வரமாகும்.
ஆதியும் அந்தமும் இல்லா இந்த அகிலத்தின் கர்த்தாவாகிய இறைவன் ஒருவனைத்தவிர நாம் காணும் அனைத்திற்கும் ஏன் நமக்கும் கூட எப்போதும் எதிர் எதிர் முனைகள்/முகங்கள்/துருவங்கள் இருக்கத்தான் செய்யும். நாணயத்தின் இரண்டு பக்கங்கள், பூமியின் இரண்டு துருவங்கள்( வட துருவம், தென் துருவம்), கோடை காலமும் மாரி காலமும், பிறப்பு இறப்பு என அனைத்துமே இரண்டு முற்றிலும் வேறுபட்ட பார்வைக் கோணங்களை தம்மகத்தே கொண்டுள்ளன. அதாவது ஒவ்வொன்றிற்கும் குறைந்தபட்சம் இரண்டு வகையான பார்வைக் கோணங்கள் உண்டு என்பதே பிரபஞ்ச ரகசியமாகும். தனி ஒன்றாக தொடக்கமோ முடிவோ இல்லாத, இன்பமோ துன்பமோ இல்லாத, விருப்போ வெறுப்போ இல்லாத ஒன்றையே நாம் ஏகன் அதாவது இறைவன் என்கிறோம்.
நீண்ட நேரம் வெயிலில் அலைந்த பின் கிடைக்கும் ஒரு சிறு மர நிழல், தாகத்தினால் நா வறண்ட பின் கிடைக்கும் ஒரு குவளை நீர், நெடு நேர கண் விழிப்பின் பின் கிடைக்கும் ஒரு குட்டித் தூக்கம் இவற்றில் தானே அதிகளவு சுவையும் சுகமும் இருக்கிறது என்பது உண்மை தானே? இது போலவே பல போராட்ட்ங்கள், துன்பங்களின் பின் கிடைக்கும் வெற்றியில் தானே சொல்லமுடியா ஆனந்தமும் சுகமும் அடங்கியிருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். "அமைதியான கடல் திறமையான மாலுமிகளை உருவாக்குவதில்லை".
இதைப்போன்று தான் ஒருவர் அனுபவிக்கும் தோல்விகளும், சவால்களும், தடுமாற்றங்களுமே அவனை பூரணப்படுத்தி அடுத்த நிலைக்கு தகுதியானவனாக தயார் செய்யும். போட்டியில் முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும் அனால் முயலாமை ஒருபோதும் வெற்றி பெறாது. எனவே நாம் நமது நோக்கில் உச்சம் தொட அச்சம் தவிர்த்து களத்தில் இறங்கி நம் கடமைகளை மட்டும் சரிவரச் செய்தால் போதுமானது. ஏனெனில் வெற்றியென்றோ தோல்வியென்றோ அங்கிகாரம் அளிப்பது எப்போதும் மூன்றாம் நபராகவே இருக்கிறார்.
வெற்றியை விட தோல்வியையே நாம் அதிகம் கொண்டாட வேண்டும். ஏனெனில் தோல்வியே வெற்றியின் இரகசியம் என்பது தான் இதன் ஆழம். நாம் அடைந்த தோல்விகளே வெற்றிக்கான மார்க்கத்தை கற்ப்பிக்கும் சிறந்த ஆசான். பல தோல்விகள் கண்டு, பல தடைகள் தாண்டி வரும் ஒரு வீரனை/வெற்றியாளனை எந்த ஒரு சக்தியாலும் வென்றுவிட முடியாது. " இதுவும் கடந்து போகும் " என்ற எண்ணங்கொண்டவனோ தன்னம்பிக்கையோடு போராடி எத்தகைய தடைகளையும் தாண்டி இறுதியில் தனது இலக்கினை அடைகிறான்.
"தோல்வி அடைந்தால் மனதை கனமாக்கிக் கொள்ளாதீர்கள்; வெற்றி அடையும் போது தலையை கனமாக்கிக் கொள்ளாதீர்கள்" ஏனெனில் எதுவும் கடந்து போகும்.
கதை
மன்னன் ஒருவன் ஒரு நாள் தன் அரசசபை மண்டபத்தில் அறிஞர்களிடமும் மந்திரிமார்களிடமும் "இக்கட்டான சந்தர்ப்பங்களில் படித்தால், எனக்கு உதவக்கூடிய ஒரு மந்திரத்தை முன்மொழிய வேண்டும், நான் இதை என் மோதிரத்தில் பொறிக்கப் போகிறேன்" என்றான். பலகாலம் முயன்றும், இக்கட்டான சூழ்நிலையில் படித்ததால் அரசனுக்கு உதவக்கூடிய அம்மந்திர மொழியை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அரசசபை மண்டபத்தில் பணிபுரியும் வயதான வேலையாள் ஒருவர் இருந்தார். அவர் வயதான முதியவராக இருந்தமையால் மன்னன் அவரை வேலையாளாக மட்டும் கருதாது, மிகுந்த மரியாதையும் வைத்திருந்தான். ஒரு நாள் அரண்மனையில் விவாதம் நடந்துகொண்டிருந்தபோது முதியவரே முன்வந்து, மன்னனுக்கு ஒரு மோதிரத்தையே பரிசளிக்கின்றார். "இம்மோதிரத்தை பெற்றுக்கொள்ளுங்கள் மன்னா, இதை நான் என் ஞரன குருவிடமிருந்து கிடைக்கப்பெற்றேன், இதில் உமக்கு வேண்டிய அம்மந்திரச் சொல் பதிக்கப்பட்டிருக்கிறது, இருந்தாலும் அதை இப்போது படித்துப்பார்க்கத் தேவையில்லை, எல்லாம் முடிந்து விட்டது, வேறு வழியேயில்லை எனும் சமயத்தில் மட்டும் உச்சரித்துப் பாருங்கள் என்கிறார்.
பல ஆண்டுகள் உருண்டோடின. நாட்டின் மீது படையெடுப்பு நடந்த சமயம் அது. மன்னன் நாட்டை போரில் இழந்துவிட்டான். வேறு வழியின்றி குதிரையில் புறப்பட்டு நாட்டைவிட்டு விலகிச்சென்றான். எதிரிப்படை தொடர்ந்து மன்னரை துரத்திச்சென்றுகொண்டிருந்தது. மன்னன் சென்றுகொண்டிருந்த பாதையும் முடிவுக்கு வந்தது. ஒரு மலைமுகட்டை வந்தடைந்தான். கீழே பெரும் பள்ளத்தாக்கு, மறுபக்கம் எதிரிப்படை. இலை குலைகளால் தன்னை மறைத்துக்கொண்டான். செய்வதறியாது திகைத்தான். யோசனையில் உறைந்து போனான். இந்த நேரத்தில் தான் அவனுக்கு மோதிரத்தின் நினைவு வந்தது. மோதிரத்தை எடுத்து அதில் இருந்த வாசகத்தை படித்தான். " இதுவும் கடந்து போகும்" என்பது தான் அதில் பொறிக்கப் பட்டிருந்த அந்த மந்திர வசனம். மன்னன் பொறுமை காத்தான். வெற்றிக்களிப்பில் அலட்சியமாய் இருந்த எதிரிப்படை " மன்னன் பள்ளத்தாக்கில் வீழ்ந்து இறந்திருப்பானோ என நினைத்து சற்று நேரத்தில் விலகிச்சென்றுவிட்டது.
ஒற்றர் படையின் உதவியோடு திட்டங்கள் பல போட்டு படைகளைத்திரட்டி நாட்டை மீண்டும் வென்றெடுத்தான் மன்னன். நகரத்தில் நுழைந்த போது மன்னனுக்கு கோலாகலமான வரவேற்புக் கொடுக்கப்பட்டது. மன்னர் தன்னைப்பற்றி பெருமையாக உணர்ந்தார். மன்னர் அரண்மனை வாசலை அடைந்தார். வேலையாட்கள் அனைவரும் மன்னனை வரவேற்க நுழைவாயிலில் நின்றிருந்தனர். மன்னன் அப்பெரியவரைக் கண்டான். கனிவோடு வெற்றிப்புன்னகை செய்தான், முதியவரை நெருங்கி நன்றி சொன்னான். "இதுவும் சரியான நேரம் தான், அம்மோதிரத்தை எடுத்து, வசனத்தை திரும்பவும் படியுங்கள்" என்றார் முதியவர். மன்னனோ "இப்போது நான் தான் வெற்றிபெற்றிருக்கிறேனே, அதுமட்டுமில்லாமல் மக்கள் என்னை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள், அப்படியிருக்க ஏன் இவ்வாறு சொல்கிறீர்கள்" என்றான். "மன்னா இப்போது நீங்கள் பெற்ற வெற்றியானது தள்ளிப்போடப்பட்ட இன்னொரு இன்னலான சூழ்நிலையாகவும் இருக்கலாம், கோபப்படாதீர்கள் மன்னா, எதிரி நாட்டு மன்னன் எப்போது வேண்டுமானாலும் திடீர் தாக்குதலையும் செய்யலாம் உண்மைதானே" என்றார். சிந்தை கொண்ட அரசன் என்றபடியால் பெரியவரின் வார்த்தைப்படியே மீண்டும் அம்மோதிர வசனத்தை படித்தான். " இதுவும் கடந்து போகும்" என்ற செய்தி அவ்வளவு ஆர்ப்பரிப்பிலும் கேளிக்கையிலும் கூட மன்னரை அமைதியடையச் செய்தது.
வெற்றியும் தோல்வியும், இன்பமும் துன்பமும், மகிழ்சியும் கவலையும் எதுவாக இருந்தாலும் கடந்து போகும் மற்றும் கால ஓட்டத்தில் கரைந்து போகும் ஒன்று தான். ஏன் நாமே ஒரு கட்டத்தில் இறந்து போகவேண்டியவர்கள் தானே பிறகு எதற்கு இந்த வீண்????? இதைத் தான் பகவான் கிருஷ்ணர் "எதை நீ கொண்டு வந்தாய் அதை இழப்பதற்கு, எதை நீ எடுத்துக்கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது, எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது, எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகும், மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகிறது, இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமும் ஆகும்" என்றார். நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்..
நன்றி

No comments:
Post a Comment