Thursday, 11 July 2019

5. எங்கிருந்தும் கற்றுக்கொள் 


வாழ்க்கை கடல் போல, ஆசை அலை போல, மனிதர் படகு போல். அலை மோதும் படகு ஆட்டம் கண்டாலும் நிமிர்ந்து நின்றால் கரையில் சேர்ந்துவிடும். இன்றைய வாழ்வே நேற்றைய மனிதரின் ஆசைக் கனவுதான் இல்லையா? அதாவது ஆசை நியாயமானதாக இருந்து நாம் நேர்மையான வழியைப் பின்பற்றுவோம் ஆயின் விளைவு நன்மையாக மட்டுமே இருக்க முடியும் என்பதாகும். ஆசையே மாயை, மாயையே ஆசை, ஆசையே அழிவென்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். நன்றாக யோசித்துப் பாருங்கள், ஆதிகால மனிதர்களை. எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்கள் எத்தனை பிரச்சினைகளுக்கிடையில் வாழ்ந்திருப்பார்கள். 

உண்மையில் நாம் ஒரு பிரச்சினையில் இருந்தோ துன்பத்திலிருந்தோ மீள வேண்டுமாயின் அப்பிரச்சினையோ துன்பமோ இல்லாத வாழ்வை வாழ ஆசைப்படவேண்டும். இதைத்தான் சமயம் சொல்கிறது "நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகின்றாய்". இதையே தான் ஈர்ப்பு விதி என்பார்கள். ஈர்ப்பு விதி(low of attraction) என்பது நாம் எமது எண்ணங்களாலும் நினைப்புகளாலும் எதை எண்ணுகிறோமோ அதையே அல்லது அவற்றையே எம்மை நோக்கி ஈர்த்தெடுத்து பெற்றுக்கொள்வோம் என்பதாகும். 
"அளவறிந்து ஆசைகொள்" என்பதெல்லாம் சமூகத்தில் பெரிய அந்தஸ்த்தில் உள்ளவர்கள் தாழ்நிலையில் உள்ளவர்களை முடக்குவதற்கும் அடக்குவதற்கும் கையாண்ட யுக்தி போலவே தோன்றுகின்றது. ஏனெனில் இப்பிரபஞ்ச ஈர்ப்பு விதி எல்லா உயிர்களுக்கும் பொருந்தக்கூடிய ஒன்று. இதற்கு எவ்வுயிரும் விலக்கானது அல்ல. "நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிடுவாய்" என்பது மட்டுமே இங்கே சத்தியமான உண்மை. 

உதாரணமாக ஒரு மாணவன் "நான் இம்முறை போட்டியில் தோல்வியடையக் கூடாது" என வேண்டிக் கொள்வானாயின் அவன் வெற்றியடைவது உறுதியல்ல. ஏனெனில் அவன் தோல்வியை தன்னை நோக்கி ஈர்த்துக் கொள்கின்றான். தோல்வி பயம் அவனை சூழ்ந்து கொள்ளும். மாறாக அவனது வேண்டுதல் எப்படி இருக்க வேண்டும் என்றால் "இம்முறை நான் போட்டியில் பங்குபற்றி சிறப்பான முறையில் வெற்றியடைய வேண்டும்" என்பதாக இருக்க வேண்டும். இம்முறையில் பிரார்த்திக்கும் போது தான் அவனால் தன்னை நோக்கி வெற்றியை ஈர்க்க முடியும், வெற்றிக்காக போராட முடியும். எனவே இறைவனிடத்தில் நாம் செய்யும் பிரார்த்தனைகள் ஈர்ப்பு விதிக்கமைய செயற்படும் ஒன்றாகும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.  

நாம் ஒரு செயலைச் செய்யும் போது அச்செயலை ஏன் செய்கிறோம் என்பதை உணர்ந்து செய்தால் நாம் விழிப்படைந்துள்ளோம் என்பது பொருள். அதே போல் ஒரு சொல்லைச் சொல்லும் போது கூட அதன் பொருள் விளங்கிச் சொன்னால் நாம் விழிப்படைந்துள்ளோம் என்பது பொருள். நாம் விழிப்படைய உதவுபவை நாம் கற்கும் கல்வியேயாகும். மனிதன் கற்ற கல்வியால் அறிவினை வளர்த்துக் கொண்டு பெற்ற அறிவினை சமூகத்தில் ஆற்றலாக வெளிப்படுத்த வேண்டியது அவன் கடமையாகும். சமூகத்தில்  ஆற்றலாகாத அல்லது ஆக்கத்தினை உண்டுபண்ணாத எந்தக் கல்வியாலும் பயன் எதுவும் இல்லை. அத்தகைய கல்வி ஏட்டுச்சுரக்காய்க்கு ஒப்பானதாகும். "கற்றது கையளவு கல்லாதது உலகளவு" என்பார்கள். நாம் புதிதாக ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்ளும் போது நாம் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் வளர்ந்து கொண்டு இருக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 
 " ஒருவருக்கு கல்வியே கண்களாக இருந்து அறிவொளி மூலம் இவ்வுலகைக் காண்பித்துக் கொண்டிருக்கிறது "

கதை

அரசன் ஒருவனுக்கு மகன் ஒருவன் இருந்தான். மன்னனின் பின் இளவரசனாக முடி சூடிக்கொள்ளப் போவது அவன்தான். எனவே மன்னர் தன் நாட்டிலேயே சிறந்த ஞரனி ஒருவரை தேர்ந்தெடுத்து அவரிடம் குருகுலக் கல்விக்காக மகனை அனுப்பி வைத்தார். ஞரனியும் தனக்கு தெரிந்த வித்தைகளையெல்லாம் அவனுக்கு சொல்லிக் கொடுத்தார். பன்னிரெண்டு ஆண்டுகள் கல்வி முடித்து மகன் அரண்மனை திரும்பினான். மகனை பார்த்ததும் மன்னனுக்கு பெருமையில் கர்வம் வந்துவிட்டது. 

ஒரு நாள் ஊர் மக்கள் முன்னிலையில் தன் மகனை நிறுத்தி அவன்  திறமையால் தன் பெருமையை பறை சாற்ற எண்ணினான். குறித்த நாளும் வந்தது, மகன் அரச சபையில் வந்து நின்றான். "என் மகன் திறமையை சோதிப்போர் சோதித்துக் கொள்ளலாம், ஏனெனில் உங்கள் அடுத்த இளவரசன் இவன் தான் என்றான்" மன்னன். கூட்டத்திலிருந்து பெரியவர் ஒருவர் முன்வந்து "உன் கண்களை மூடு" என்றார் மகனை நோக்கி. பெரியவர் தன் கையிலிருந்த மோதிரம் ஒன்றைக் கழற்றி அவன் உள்ளங்கையில் வைத்து கைகளை இறுக்கப் பொற்றிவிட்டு, "உன் கையில் இருக்கும் பொருள் பற்றிக் கூறு பார்க்கலாம்" என்றார்.

"இது வட்ட வடிவமானது, இதன் நடுவில் துளை ஒன்று உள்ளது, இது உலோகம் ஒன்றால் ஆக்கப்பட்டிருக்க வேண்டும்" என்றெல்லாம் தன் யூகங்களைக் கூறிய இளவரசன் கடைசியாகச் சொன்னான் "இது ஒரு வண்டிச் சில்லாகத்தான் இருக்க வேண்டுமென்று". அறிவு எங்கிருந்தும் கிடைக்கலாம் ஆனால் புத்திசாலித்தனத்தை யாராலும் கற்றுத்தர முடியாது என்பது இக்கதையில் இருந்து விளங்கும். 

புத்திசாலித்தனம் என்பது நமக்குள் இருக்கும் சுய ஒளி கொண்டு நாமாக தேடிக்கொள்ள வேண்டிய ஒன்று என்பதை புரிந்து கொள்ள வேண்டும். "நீ கல்லாக இருந்தாலும் கற்ற கல்வி உன்னை சிற்பமாக செதுக்கிவிடும்"

1. "எப்பொருள் யார்யார் வாய்க் கேடப்பினும் அப்பொருள்; மெய்ப்பொருள் காண்பது அறிவு"
2. "எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்; மெய்ப்பொருள் காண்பது அறிவு"

நன்றி



References:- https://senthilvayal.files.wordpress.com/2009/12/vetri-nichayam-by-suki-sivam-tamil.pdf




































No comments:

Post a Comment

                                                   ஆண்மை தவறேல்   நாம் அனைவரும் ஔவையார் எழுதிய நீதி  நூலான ஆத்திசூடியை கேள்விப்பட்டிருப்போம்...