Wednesday, 12 June 2019

பஞ்ச தந்திரம் 


1. சுய ஒளி

சமயம் என்றால் என்ன? சமயம் என்பதன் பொருள் வாழும் முறை அல்லது வாழ்க்கை நெறி என்பதாகும். எந்தச் சமயமானாலும் சரி, அதன் தொழில் இறைவனை அடைதற் பொருட்டு அதாவது ஆன்மாக்களுக்கு முக்தி கிடைக்கச் செய்யும் பொருட்டு வாழ்வதற்கு ஒழுங்குகளையும் நெறிமுறைகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஒரு மார்க்கமாய் அமைத்தலாகும். சுய ஒளி என்பது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்க வேண்டிய ஒவ்வொரு விடயம் பற்றிய தனிப்பட்ட புரிந்துணர்வு ஆகும். எந்தச் சமயத்தவராயினும் எந்த நெறியை பின்பற்றுபவராக இருந்தாலும் தமக்குள் ஒரு சுய ஒளி இல்லாமல் விளக்கமற்று ஆகமங்களையும் வேதங்களையும் கடைப்பிடிப்பார்களாயின் அவர்கள் வாழ்க்கை நரகமாக மாறுவதோடு மட்டுமல்லாமல் இப்படிப்பட்டவர்கள் பிறர் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி விடுவார்கள்.



கதை
அது ஒரு துறவிகள் தங்கும் சத்திரம். ஓர் நாள் இரவு வணிகன் ஒருவன் நெடுநாள் பயணத்தினிடையே அச்சத்திரத்தில் தங்க நேர்ந்தது. அவனும் துறவிகளுடனே மண்டபத்தில் வரிசையில் அடுக்கப்பட்டிருந்த கட்டில் ஒன்றில் அமைதியாக ஓய்வெடுக்கலானான். வணிகன் இராத்திரி சமயத்தில் திடுக்கிட்டு எழுந்தான். காரணம் மூட்டைப் பூச்சிகள் அவனை வரிசையில் கடித்துக்கொண்டிருந்தன. அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். துறவிகள் அனைவரும் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தார்கள். படுக்கையை விட்டு எழுந்த அவன் தரையில் ஒரு துணியை விரித்து ஜன்னலோரமாக படுத்துக்கொண்டான். மறுநாள் காலை நன்றாக உறங்கிக்கொண்டிருந்த அவனை துறவி ஒருவர் தட்டி எழுப்புகிறார். கண்விழித்தவன் விழிகள் பிதுங்கியபடி துறவியிடம் கேள்விகள் கேட்கத் தொடங்கினான். வணிகன் "உங்கள் படுக்கைகளில் மூட்டைப் பூச்சிகள் இல்லை போலும், எனது படுக்கையில் சரியான மூடைப் பூச்சி தொல்லை அது தான் என்றான். "உன் படுக்கை எமது படுக்கையல்ல இங்கு அனைவரினதும் படுக்கைகளிலுமே அவை நிறைந்து கிடக்கின்றன" என்றார் துறவி. "அப்படியாயின் அவற்றைக் கொல்ல ஏன் எதுவும் பாவிக்கவில்லை? எனக் கேட்டான் வணிகன். துறவி புதிர் போடத் தொடங்கினார். "எந்த உயிர்களையும் கொல்லலாகாது  படைத்தலும் அழித்தலும் இறைவனுக்கே உரியது. "இது கொல்லாமை நியதி" என்றார். விறைத்துப் போன வணிகன் "அப்படியாயின் அவைகளை வெளியில் போட்டுவிட்டு அனைவரும் தரையில் படுத்துக்கொள்ளலாமே" என்றான். துறவியின் பதில் அவனை மலைக்க வைத்தது.  அவர் சொன்னார் "அப்படியாயின் மூட்டைப் பூச்சிகளுக்கு உணவளிப்பது யார்? அவை எம் ரத்தம் உறிஞ்சாவிடில் இறந்து போவது சாத்தியமாகலாம்". வணிகன் பேச்சு மூச்சு எதுவுமின்றி விடைபெற்றவனாய் ஒரேயடியாய் ஓட்டம் பிடித்தான்.

இக்கதையில் வரும் துறவிகள் போன்றே சிலர் விழிப்படைந்த பின்னும் வேறு ஒரு கோணத்தில் உறங்கிங்கொண்டிருக்கிறார்கள். நாம் கண்களை மூடிவிட்டு உலகம் இருட்டில் இருக்கின்றது என்பது அபத்தமானது.


தொடரும்...          















No comments:

Post a Comment

                                                   ஆண்மை தவறேல்   நாம் அனைவரும் ஔவையார் எழுதிய நீதி  நூலான ஆத்திசூடியை கேள்விப்பட்டிருப்போம்...