Monday, 24 June 2019

2. கோபம் எனும் போதை 

"கோபம் என்பது பிறர் செய்யும் தவறுகளுக்கு நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனை" என்றார் புத்த பெருமான். மனிதர்கள் DNA எனப்படும் பாரம்பரிய பதார்த்தங்களை உயிர் அலகில் கொண்டவர்கள். மனிதனின் சகல இயல்புகளையும் DNA தீர்மானிக்கின்றது என்பது விஞ்ஞானரீதியான நம்பிக்கை. இவ் DNAகள்  பரம்பரை பரம்பரையாக கடத்தப்பட்டுவரும் பல தலைமுறைகளுக்குச் சொந்தமான ஒன்றாகும். சொல்லப்போனால் ஒரு மனிதன் ஒரு மனிதனல்ல என்பதைப்போன்றதாகும். இது போலவே மனிதர்களும் கோபம், பயம்,காமம்,சந்தோசம்,சந்தேகம்,குரோதம்,அன்பு,பாசம் என பல உணர்வுகளையம் உணர்ச்சிக்களையும் தம் மனங்களில் சுமந்தவர்கள்.



மனித மனம் என்பது வெங்காயத்திற்கு உருவகமானது. அதாவது மனம் எண்ணங்களை தனது தோலாக போர்த்திக்கொண்டுள்ளது. வெங்காயத்தினை உரிக்க உரிக்க எப்படி ஒன்றுமில்லாது தேய்ந்து போகிறதோ அது போலவே மனமும் கொண்டுள்ள எண்ணங்களை  நீக்கும் போது ஒன்றுமில்லாது போகும். ஒன்றுமே இல்லாத மனதை நாம் எம் உணர்ச்சிகளையும்  உணர்வுகளையும் கொண்டு பிறரையும் எம்மையும் தேவையில்லாது  ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே மனதை ஏக நிலையில் அதாவது ஒரு நிலையில் வைத்திருப்பது தான் ஞானம் அடைவதற்கான ஒரே மார்க்கமாகும். ஞான நிலை என்பது தெளிவு நிலை என்பதாகும். நாம் எமது உடலையும் மனதையும் திடகாத்திரமாகவும் தெளிவுடனும் வைத்திருக்கவேண்டியது அவசியமாகும். உடல் உள்ளத்தை பாதிக்கும்; உள்ளம் உடலை பாதிக்கும் என்ற உண்மையை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

கதை 
 சமூகத்தில் நல்ல அந்தஸ்த்தில் உள்ள அபிராம் ஒருநாள் பஸ்ஸில் பயணப்பட்டார். செல்லும் வழியில் போதையேறிய  ஒருவன் பஸ்ஸை மறித்து ஏறிக்கொண்டான். அவனும் அபிராம் இருந்த சீற்றிலேயே போய் அமர்ந்து கொண்டான். குடிமகன்  யன்னலோரமாக இருந்த அபிராமை ஒரேயடியாய் கதையால் நச்சரித்துக்கொண்டு வந்தான். இடையிடையே வாந்தி எடுப்பது போல் தலையை வெளியில் தள்ளிக்கொள்வது வேறு. பொறுமையுடன் அபிராம் "நீங்கள் யன்னல் ஓரமாக வந்து அமர்ந்து கொள்ளுங்கள்" என்றார்.

குடிமகன் சொன்னான் "வாந்தி வரும் போது நான் எடுத்துக்கொள்கிறேன் நீர் இரும்" என்றான். ஒவ்வொரு முறையும் அவன் அபிராம் மீது ஏறி ஜன்னல் வழியே தலையை நீட்டும் போதும் அபிராம் பதட்டத்தில் தடுமாறினார். அவன் எங்கே வாந்தியெடுக்கப் போகிறானோ? என்று பயந்து கொண்டார்.

சம்பவம் நீடித்தது, சலித்துப்போன அபிராம் சினங்கொண்டு "வாந்தியை என் தலைமேல் எடு" என்றார். இவர்கள் இருவரையும் கவனித்துக்கொண்டிருந்த பின்னால் இருந்தவர்களில் ஒருவர் சொன்னார் "இந்த குடிகார பயல்கள் இருவரும் பஸ்ஸில் ஏறி செய்யிற கலாட்டா இருக்கே" என்றார். அடுத்தவர் ஒருபடி மேலே போய் அதிலும் யன்னல் ஓரமாக இருப்பவரை பாரும் பயங்கர குடிகாரன் போலும், தன் தலைக்கு மேலேயே வாந்தி எடுக்கச் சொல்கிறார்! அபிராமிற்கு வியர்த்துக்கொட்டியது. சமூகத்தில் நல்ல பேர் எடுத்து நல்ல அந்தஸ்த்தில் உள்ள இவருக்கு இது தேவைதானா?

அற்ககோல் போதை என்றால் அகத்தில் இருக்கும் உணர்வுகளும் போதை தான். மனிதர்கள் அவற்றை தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காவிடில் மனிதரை அவை தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துவிடும். இதேவேளை இன்னொன்றையும் புரிந்துகொள்ள வேண்டும். உணர்ச்சிகளையோ உணர்வுகளையோ அவ்வாறே வெளிப்படுத்திவிட வேண்டும்; இல்லையெனில் அவை  தம்மை நோயாக வெளிப்படுத்திவிடும். உணர்ச்சிக்களை வெளிக்காட்டுவது தான் மனதின் தத்துவம் என்றால் உணர்ச்சிகள் அற்ற நிலையே புனிதமான தத்துவ நிலையாகும்.
"பேச இருக்கும் வார்த்தைகளை மட்டுமே நாம் ஆளலாம்: பேசிய 
வார்த்தைகள் எம்மை ஆளும்"

 தொடரும்...























 

No comments:

Post a Comment

                                                   ஆண்மை தவறேல்   நாம் அனைவரும் ஔவையார் எழுதிய நீதி  நூலான ஆத்திசூடியை கேள்விப்பட்டிருப்போம்...