Wednesday, 3 July 2019

4. தன்னம்பிக்கை


பஞ்ச பூதங்களில் கலந்துள்ள இறை சக்தியின் ஒரு துகளே, மனிதர்கள் நம்மில் உயிர் சக்தியாக இருக்கின்றது. மனிதன் நம்பிக்கை மயமானவன். நம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதரின் இயல்புக்கும் தக்கபடி அவரவரிடம் காணப்படும் ஒன்றாகும். "நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகின்றாய்" என்கிறது நம் சமயம். எனவே நாம் ஒவ்வொருவரும் எம்மில் நம்பிக்கை பெருகும் வண்ணம் எமது இயல்புகளை   வளர்த்துக்கொள்ள வேண்டும்.
யானையதற்கு அதன் தும்பிக்கை பலம் என்றால் மனிதனவனுக்கு அவன் தன்  மீது கொண்ட தன்னம்பிக்கையே அவனது பெரும் பலமாகும். வரலாற்றை, எந்த ஒரு வெற்றிச் சரித்திரத்தை புரட்டிப் பார்த்தாலும் அங்கு ஆணிவேராக இருப்பது என்னவோ தன்னம்பிக்கை தான். ஆழ்மனதில் விதைக்கப்பட்ட நம்பிக்கை விதைதான் விருட்சமாகி சாதனைக் கனிகளைத் தருகின்றது. ஒவ்வொரு மனிதரும் வெறும்  பாறைகள் போன்றவர்களே. ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நம்பிக்கை  எனும் அழகிய சிலை  உறங்கிக்கிடக்கும். 

நம்மை நாமே உளி போல் திடப்படுத்திக் கொண்டு பயம்,பதட்டம்,வெட்கம்,அவமானம்,புறக்கணிப்பு போன்ற தேவையற்ற கற்துகள்களை நீக்கிவிட்டால் நம்பிக்கை எனும் அழகிய சிலையோடு  நாமும் அழகாக காட்சி கொடுப்போம். ஒரு சில வகையினர் இருக்கிறார்கள், "நான் தோற்றுவிட்டேன்; எல்லாமே முடிஞ்சு போச்சு; வாழ்க்கையே இருண்டு போச்சு" என்ற மாதிரியெல்லாம் கதைப்பார்கள். தத்தித்தத்தி நடக்கத் தொடங்கும் குழந்தையைப் பாருங்கள். ஒன்றல்ல இரண்டல்ல எத்தனை முறை  விழுந்து எழுகிறது. இவற்றிடையே எத்தனை அடிகள், எத்தனை மோதல்களை அது சந்திக்க வேண்டும். தாயானவள் தூக்கி தன்னோடு அனைத்துக் கொண்டாலும் அழுது குளறி மீண்டும் நடக்க முயற்சிக்கும். தோல்வி வெற்றியின் இரகசியம் என்பதை புரிந்து கொண்டு தோல்வியில் இருந்து படிப்பினைகளைப் பெற்று தன்னம்பிக்கையோடு எமது முயற்சியிலும் இலக்கிலும் உறுதியாக நிற்கவேண்டும்.

கதை 

துணி துவைக்கும் தொழிலாளி ஒருவன் கழுதை ஒன்றை வளர்த்து தனது தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தான். அவன் கழுதையை நெடுங்காலமாக பயன்படுத்தி வந்த படியால் கழுதை வயதாகியிருந்தது மட்டுமல்லாமல் வலுவிழந்திருந்தது. துணி மூட்டைகளைக் காவிச்செல்வதே அக் கழுதையின் பிரதான வேலையாக இருந்தது. ஒரு நாள் அந்த நெசவாளி கழுதை மீது துணி மூட்டைகளை ஏற்றி, துணி துவைப்பதற்காக ஆற்றங்கரைக்குச் சென்றான். செல்லும் வழியில் நிலமட்டத்தோடு இருந்த பாழடைந்த கிணற்றில் கழுதை தவறி விழுந்து விட்டது. சலவைக்காரன் தன் துணிகளை எண்ணி கவலைப்பட்டானே தவிர கழுதை பற்றிய நினைப்பு சிறிதுமற்றவனாய் "வயதானது தானே இதனால் என்னாகப் போகிறது" என்றபடி அலட்சியம் செய்தான்.

அவன் தன் நிலையெண்ணி கிணற்றை மூடிவிட முடிவெடுத்தான். ஏனெனில் அவ்வொரு பாதையே ஆற்றங்கரைக்கு செல்வதற்கான இலகு வழியாக இருந்தது. எனவே அவன் போய் ஊரில் இருந்தவர்களையெல்லாம் கிணற்றின் பக்கமாக அழைத்து வந்தான். அனைவருமாக சேர்ந்து கிணற்றை மூடத்தொடங்கினார்கள். ஒவ்வொருவரும் தன் பங்கிற்கு கிணற்றினுள் மண்ணை வெட்டி வாரிப் போட்டார்கள். மண்ணும் மணலும் புழுதியும் தூசியும் கழுதை மீது விழுந்தது. 

நிகழ்வுகளை சுதாரித்துக் கொண்ட கழுதை தன் மீது விழுந்த புழுதியையும் மணலையும் உதறிக்கொண்டு ஒவ்வொரு முறையும் போடப்பட்ட மண் மீது ஏறிக்கொண்டது. இவ்வாறே ஒவ்வொரு முறையும் செய்து கொண்டிருந்த கழுதை படிப்படியாக மண் மீது ஏறி மேலே வரத்தொடங்கியது. குறிப்பிட்ட நேரத்தில் கழுதை முற்றாக வெளியே வந்துவிட்டது. இச்சம்பவத்தை எதிர்பாராத நெசவாளி தன்னை எண்ணி வெட்கப்பட்டான்.

இக்கழுதை போலவே நாமும் நம்மீது விழும் புழுதிகளான பழி,அவமானம்,புறக்கணிப்பு அனைத்தையும் உதறித்தள்ளி வாழ்வில் மென்மேலும் உயர்வடைய வேண்டும். நாம் வளரும் போது நம்மை மேய நினைத்த ஆடுகள் எல்லாம் நாம் வளர்ந்த பின் நம் நிழலில் ஒதுங்கும் காலம் வரும்.
" தன்னம்பிக்கை இருந்தால் impossible என்ற வார்த்தையும் I'm possible ஆகும். பலவீனமும் பலமாகும்"



 தொடரும்...





 
















 












 

No comments:

Post a Comment

                                                   ஆண்மை தவறேல்   நாம் அனைவரும் ஔவையார் எழுதிய நீதி  நூலான ஆத்திசூடியை கேள்விப்பட்டிருப்போம்...